இந்திய விவசாயத்தின் வளர்ச்சிக்கும், அதன் நீடித்த நிலைக்கும் நேர்கொண்ட பார்வைக்கும் இருபெரும் திறவுகோலாக கருதப்படுவது விவசாய விளைபொருள் கொள்முதல் மற்றும் அதில் வழங்கப்படும் சேவைகளுமேயாகும்.
விவசாய விளைபொருட்களின் விற்பனையிலிருந்த நியாயமற்ற விலை நிலவரத்திற்கு நியாயமான அணுகுமுறையை மேற்கொண்டு விவசாயிகளின் வளமைக்கும் நிலையான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு உருவாக்கப்பட்டதே கூட்டுறவு விற்பனை சங்கமாகும்.
எனவே தான், சுமார் 65000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் நலனை மேம்படுத்த நியாயமான சேவை கட்டணத்தில் அவர்களின் விற்பனை பொருளாதாரம் ஓங்கும் வகையில் எல்லா சேவைகளையும் ஒருங்கிணைத்து வழங்கும் வகையில் செயலாற்றிட திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கமானது ஏற்படுத்தப்பட்டது.
வரலாற்று பின்னணி
உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் இடையே உள்ள அதிகப் படியான இலாப விளிம்பின் காரணமாக விவசாய உற்பத்தியாளர் தனது விளைபொருட்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான வருமானம் பறிக்கப்படுவதுடன், நுகர்வோரும் அதிக விலை செலுத்தி இன்னலுக்கு உள்ளாகிறார்கள்.
எனவே, கொள்ளை இலாபம் ஈட்டும் இடைத்தரகர்கள் முறைகேடாகப் போட்டியிடும் வியாபாரிகள் ஆகியோரின் ஏகபோக வர்த்தக பாங்கினை முறியடித்து நல்வழிப்படுத்த 30.04.1930 ஆம் நாளில் திருவாளர் எஸ்.பழனிவேலு பிள்ளை அவர்களின் சீறிய முயற்சியால் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.
எடப்பாடி வட்டம், கொங்கணாபுரம் கிராமத்தை சார்ந்தவரும் சங்கத்தின் தலைவருமான திரு.கே.ஏ.நாச்சியப்ப கவுண்டர் அவர்களால் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தனாரீஸ்வரர் மலையின் அடிவாரத்தில் 6.80 ஏக்கர் நிலம் தமிழக அரசின் நில ஆர்ஜித நடவடிக்கையின் மூலமாக 1939 ஆம் ஆண்டில் ஆர்ஜிதம் செய்து கொடுக்கப்பட்டது.
சங்கத்தின் கொங்கணாபுரம் கிளை இவரால் 05.12.1936 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
திரு.K.A. நாச்சியப்ப கவுண்டர் அவர்கள் 28.03.1935 முதல் 03.09.1951 வரை இச்சங்கத்தின் தலைவராக இருந்து கண்ணும் கருத்துமாக செயல்பட்டு சங்கத்தை அபிவிருத்தியடையச் செய்தார்.
தலைவர் திரு.K.A.நாச்சியப்ப கவுண்டர் அவர்களின் செயல்பாடுகளை அருகிலிருந்தே கண்ணுற்று வந்த கொங்கணாபுரத்தைச் சேர்ந்த அவரது தம்பி மகன் திரு.K.S.சுப்ரமணிய கவுண்டர் அவர்கள் 04.09.1951 ஆம் நாளன்று சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
திரு.K.S.சுப்ரமணிய கவுண்டர் அவர்கள் சேலம் மாவட்டத்தின் கூட்டுறவுத் தந்தையாக கருதப்படுகிறார்.
இவர் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும், சேலம் மாவட்ட மொத்த விற்பனைக் கூட்டுறவு சங்கத்தின் தலைவராகவும், சேலம் கூட்டுறவு அச்சகத்தின் தலைவராகவும், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் தலைவராகவும் சிறப்புடன் செயல்பட்டார்.
அவரது சீரிய பணிக்காலம் 26.12.1973 ஆம் நாள் முடியும் வரை அவர் சங்கத்தின் வளர்ச்சிக்கும், அற்புதமான முன்னேற்றத்திற்கும் சான்றாக விளங்கி சங்கத்தை ஓர் உச்சகட்ட நிலைக்கு உயர்த்தினார்.
திரு. K.S. சுப்ரமணிய கவுண்டர் அவர்களின் வழிமுறைகளைக் கடைபிடித்து திருச்செங்கோடு வட்டம் நெய்க்காரப்பட்டி கிராமத்தை சேர்ந்த திரு.N.A. நடேசன் அவர்கள் 30.12.1973 ம் நாள்முதல் 09.06.1976 வரை சங்கத்தின் தலைமைப் பொறுப்பை சிறப்புடன் செயல்படுத்தினார்.
இவரே சங்கத்தின் கொங்கணாபுரம் கிளைக்கு 7.15 ஏக்கர் நிலம் சொந்தமாக வாங்க அரும்பாடுபட்டு வெற்றிகண்டார். அவரின் பணிக்காலத்தில் உள்கட்டமைப்பு வசதிகளான விற்பனைக்களம் மற்றும் கிடங்கு வசதிகள் போன்றவை சங்கத்தின் கொங்கணாபுரம் கிளையில் செய்து கொடுக்கப்பட்டது. இவரது பணிக்காலத்தில் தான் சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளை ஏற்படுத்தப்பட்டு இக்கிளைக்கு என 5.80 ஏக்கர் சொந்த நிலம் வாங்கப்பட்டது.
திரு. N.A. நடேசன் அவர்களின் விடாமுயற்சியும், உழைப்பும் சங்கத்தின் சீரான வளர்ச்சிக்கு அடிகோலாக இருந்து விளங்கியது என்றால் அது மிகையாகாது.
அனுபவம் மிகுந்த திருவாளர்கள் கே.ஏ. நாச்சியப்ப கவுண்டர், கே.எஸ். சுப்ரமணிய கவுண்டர் மற்றும் என்.ஏ.நடேசன் ஆகியோர்களின் கடின உழைப்பு, சுறுசுறுப்பு, விடாமுயற்சி, தொலைநோக்குப் பார்வை பரந்த மனப்பான்மை பெற்ற கூட்டுறவாளர்களுக்கு இச்சங்கம் என்றென்றும் நன்றியுடன் கடமைப்பட்டுள்ளது.
இவர்களின் அர்ப்பணிக்கப்பட்ட முயற்சிகளால், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கமானது மாநில அளவில் ஓர் சிறப்பு அந்தஸ்தையும், நாட்டின் மாதிரி வகை கூட்டுறவு விற்பனைச் சங்கமாகவும் திகழ்ந்தும் விளங்குகிறது.
விருதுகள்
1989-90, 1990-91 மற்றும் 1993-94 ஆகிய ஆண்டுகளில் விவசாய விளை பொருட்கள் விற்பனையில் சிறப்பாக செயல்பட்டதற்கான “Dr. Punjab Rao Deshmukh Award” என்ற விருதை மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளது .
தமிழ்நாடு மாநிலத்தின் சிறந்த கூட்டுறவு சங்கத்திற்கான விருதை இந்தச் சங்கம் பலமுறை பெற்றுள்ளது.
இண்டேன் எரிவாயு பிரிவின் சிறந்த செயல்பாட்டுக்காக 1989-90 ஆம் ஆண்டிற்கு தென்னிந்திய அளவில் முதல் பரிசு பெற்றுள்ளது மற்றும் 1994-95 ஆம் ஆண்டிற்கு கோவை மண்டல அளவில் சிறந்த செயல்பாட்டுக்காக இரண்டாம் பரிசு பெற்றுள்ளது.
சங்கத்தின் 35 ஆண்டு கால இண்டேன் எரிவாயு வினியோக சேவையை பாராட்டி இந்தியன் ஆயில் கழகத்தால் பாராட்டு சான்றுதழ் வழங்கப்பட்டுள்ளது.
சங்கம் சர்வோ ஆயில் விற்பனையில் 2007-2008, 2013-2014 மற்றும் 2015-2016 ஆம் ஆண்டுகளில் இந்தியா அளவில் விருதுகளை (All India Topper) பெற்றுள்ளது.
சங்கத்தின் பெட்ரோல் பங்க் ஒவ்வொரு ஆண்டிலும் நாமக்கல் மாவட்டதில் அதிக அளவு பெட்ரோல் விற்பனைக்காக இந்தியன் ஆயில் கழகத்தால் தொடர்ந்து விருது பெற்று வருகிறது.
2018-19 மற்றும் 2019-20 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள 112 கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் சிறந்த கூட்டுறவு சங்கத்திற்க்கான விருதினை பெற்றுள்ளது.
2021 ஆம் ஆண்டில் சிறந்த சங்கமாக தேதிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் [National Cooperative Development Corporation (NCDC)] ஆல் தேர்ந்தெடுக்கப்பட்டு கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் அவர்களால் விருது வழங்கப்பட்டது.